சிறிலங்காவில் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 3 படையினர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
மொனறாகல மாவட்டம் புத்தள தம்பகோட்டா என்ற பகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு சிறிலங்க படையினருக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு சென்ற வாகனத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 3 படையினர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான படையினர் குவிக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
மணலாற்றில் மோதல்!
மணலாற்றில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
மணலாற்றின் கொக்குத் தொடுவாய், மண்கிண்டிமலை மற்றும் ஜானகபுர பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறிலங்கப் படையினர் முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டனர்.
படையினரின் இத்தாக்குதல் முயற்சிகளை விடுதலைப் புலிகள் முறியடித்ததுடன், அவர்களிடம் இருந்து இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.