பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்கும் திட்டம் தொடர்பாகப் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீஃப்பும் நாளை சந்தித்துப் பேச்சு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் தேசியச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அந்நாட்டு அதிபர் முஷாரஃப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. அவரது ஆதரவு கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (குலாமி) படுதோல்வி அடைந்தது.
இதுவரை 259 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 87 இடங்களில் வெற்றி பெற்று பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 66 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தானில் தனித்து ஆட்சியமைக்க 132 இடங்களுக்கு மேல் தேவை என்ற நிலையில், தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால, இந்த இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் பெனாசிரின் கணவருமான ஆஷிப் அலி ஜர்தாரியை நவாஸ் ஷெரீஃப் நாளை சந்தித்துப் பேசுவார் என்றும், கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி கூட்டணி ஆட்சி அமையும் நிலையில் முஷாரஃப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை பதவி நீக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று இந்த இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
இத்தேர்தல் முடிவுகள் முஷாரஃப்புக்கு செல்வாக்கில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டன. முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (குலாமி) 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கியத் தலைவர்கள் படுதோல்வி அடைந்தனர்.