இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளின் மேற்குப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.6 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஆழிப்பேரலைகள் இந்தோனேசியாவைத் தாக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பபட்டது.
பின்னர் 2 மணி நேரத்திற்குப் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
சர்வதேச நேரப்படி 3.08 நிமிடத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தின் மையம் 2.75 டிகிரி வடக்கும், தீர்க்க ரேகை 95.96 கிழக்கும் சந்திக்கும் இடத்தில் 34.4 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியுள்ளதென அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஒரு நிமிட நேரம் நீடித்துள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியப் பகுதி கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பிற்குள்ளான பட்டா ஆசே மாகாணத்தில் இருந்து 310 கிலோ மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கிய மேற்கு சுமத்ரா நிலப்பகுதியில் 75,000 அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து செய்திகள் ஏதும் வரவில்லை.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.