பக்ரைனில் பணியாற்றும் இந்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று வளைகுடா நாடுகளுக்கான இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வளைகுடா நாடுகளின் சட்டங்களுக்கு இந்தியர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும், விதிகளுக்குப் புறம்பாக வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர் நலச் சட்டங்களைப் புறக்கணிக்கும் தொழிலாளர்களுக்கு தூதரகம் ஆதரவளிக்க முடியாது என்றும் பாலகிருஷ்ண ஷெட்டி கூறினார்.
பக்ரைனில் உள்ள கட்டுமானத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட அயல்நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டுக் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில், இந்தியா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஐக்கிய அரபு நாடுகளின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவியைச் சந்தித்த பாலகிருஷ்ண ஷெட்டி, பணியிடங்களில் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும் வழிமுறைகள் குறித்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.