பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது குறித்துத் திருப்தி தெரிவித்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தானை அதன் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் மீண்டும் ஜனநாயகத்தின் பாதையில் இட்டுள்ளார் என்று கூறியுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், அந்நாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கைகள், நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படாது என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டானா பெரினோவிடம், பாகிஸ்தான் மக்களிடையே முஷாரஃப்பிற்கு ஏற்பட்டுள்ள செல்வாக்குச் சரிவு பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பாகிஸ்தான் மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாக்குகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பொதுத் தேர்தல் பெரும்பாலான இடங்களில் முறைகேடுகள் இல்லாமல் நடந்துள்ளது" என்றார்.
முஷாரஃப் ஆதரவுக் கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ளது பற்றிக் கருத்துத் தெரிவிக்காத பெரினோ, பாகிஸ்தானை ஜனநாயகத்தின் பாதையில் நடத்திச் செல்வதற்கு அந்நாட்டில் அமையவுள்ள புதிய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.