தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிர் தப்ப, உகாண்டா சர்வாதிகாரி இடி அமீன் வழியில் இலங்கையை விட்டு வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சம் புகலாம் என்று சிறிலங்கா அரசு யோசனை கூறியுள்ளது.
உகாண்டாவில் கடந்த 1971 ம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இடி அமீன், 1979 ம் ஆண்டு நிகழ்ந்த உகாண்டா - தான்சானியா போருக்குப் பின்னர் லிபியாவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் 1981 ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சென்று, 2003 ம் ஆண்டு இறக்கும் வரை அங்கேயே தங்கி இருந்தார்.
இதுபோன்றதொரு தீர்வை பிரபாகரனுக்கு தாங்களும் தெரிவிப்பதாக சிறிலங்க அயலுறவுத் துறை அமைச்சக செயலர் பாலிதா கோஹனா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்ட்ரேலியத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், " பிரபாகரன் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினால் , ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா நிச்சயம் அவரை பிடித்துவிடும்.மேலும் இந்தியாவும் அவ்வப்போது பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி வருகிறது " என்றார்.
சிறிலங்காவின் ஆதாரமற்ற தகவல்கள்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலையாக வெளியேறிய பிறகு, தமிழர் பகுதிகளில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருவதுடன், புலிகளின் மன உறுதியைக் குலைக்கும் நடவடிக்கைளையும் சிறிலங்க அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில் படுகாயம் அடைந்துவிட்டார், செயலற்றுப் போய்விட்டார் என்பது போன்ற ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டுவந்தது.
இந்நிலையில், பிரபாகரன் போரில் தோற்று இலங்கையைவிட்டு தப்பிச்செல்ல தருணம் பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, இடி அமீன் பாணியில் பிரபாகரன் வெளிநாட்டில் தஞ்சம் புகலாம் என்று சிறிலங்க அரசு கூறியுள்ளது.