உலகத்தையே ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் அதிபர் முஷாரப்பின் ஆதரவு கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பாகிஸ்தானில் நேற்று பல வன்முறைகளுக்கிடையே பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து வாக்கு சீட்டுகள் எண்ணும் பணி நேற்று இரவு முதலே தொடங்கியது.
இதில் மொத்தம் உள்ள 272 தொகுதிகளில் இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட 125 தொகுதிகளில் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி 50 இடங்களையும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 39 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
மேலும், அதிபர் முஷாரப்பின் ஆதரவு பெற்ற முக்கிய கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் சவுத்ரி சுஜாத் ஹுசைன் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் சவுத்ரி அகமது முக்தாரிடம் தோல்வியடைந்தார்.
சுயேட்சைகள், மற்ற சிறிய கட்சிகள் 18 இடங்களில் பெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரத்தொடங்கியதை அடுத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி அதிபர் முஷாரப் ஆதரவு கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கட்சிகளின் முன்னணி நிலவரம்:
பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி - 69
நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி - 62
முஷாஃப்பின் ஆதரவு கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) - 29
மற்றவை - 16