குண்டு வெடிப்பு, வன்முறைகள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு இடையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
சில இடங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதைக் காரணம் காட்டித் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்த வாக்குச் சாவடிகளில் சிக்கலுக்கு உரியவற்றை தலைமைத் தேர்தல் ஆணையர் காசி முகமது ஃபரூக் பார்வையிட்டார். வாக்குப் பதிவு மந்தமாக நடந்த பகுதிகளை அவர் பார்வையிட்ட போது, அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வாக்குப் பதிவு குறைவாக இருப்பதைக் காரணம் காட்டித் தேர்தலை ரத்து செய்வதற்குச் சட்டத்தில் இடமில்லை" என்றார் முகமத ஃபரூக். பாகிஸ்தானுக்கு உரிய வன்முறைகளைத் தவிர்த்து, பொதுத் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி நம்பிக்கை!
பொதுத் தேர்தலில் தங்களது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெரும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி நம்பிக்கை தெரிவித்தார்.
சிந்து மாகாணத்தின் தெற்குப் பிராந்தியமான நவாப்ஷாவில் தனது வாக்கை பதிவு செய்த ஜர்தாரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த அரசை பாகிஸ்தான் மக்கள் கட்சி அமைக்கும் என்றும் எல்லா விவரங்களும் இன்று மாலைக்குள் தெரியவரும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவியுமான பெனாசிர் புட்டோ
கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவரது கணவரான ஜர்தாரி, தங்களது கட்சி நாட்டில் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் வெற்றிபெரும் என்று கூறியுள்ளது மக்களிடையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பாதுகாவலர்கள் புடைசூழ குண்டு துளைக்காத காரில் வந்த ஜர்தாரி, கடும் பாதுகாப்பிற்கு இடையே வாக்களித்தார். பின்னர் அவர் திரும்பிச் செல்லும் போது தங்களது ஆதரவாளர்களைப் பார்த்து கைவிரல்களை உயர்த்தி வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
இணைந்து செயல்பட முஷாரஃப் விருப்பம்!
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப், ராவல்பிண்டி நகரில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அப்போது, "நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவருடனும் இணைந்து செயல்படவே நான் விரும்புகிறேன்" என்றார்.
பாகிஸ்தான் வடமேற்கு எல்லையான தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ஜமைத் உலேமா இ இஸ்லாம் தலைவர் மெளலானா பஸ்லூர் ரஹ்மான் வாக்களித்தார். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்கு வாக்குப் பதிவு மிக மந்தமாக இருந்தது. இடைக்கால அரசின் பிரதமர் முகமதுமியான் சும்ரோ தெற்கு சிந்து மாகாணம் ஜகோபாபாதில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.