குண்டு வெடிப்பு, வன்முறை, பதற்றம், தீவிரவாதிகளின் மிரட்டல் ஆகியவற்றால் பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவில் விறுவிறுப்பு குறைந்தது.
வடமேற்கு பாகிஸ்தானின் பராச்சினார் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 49 பேர் பலியானதையடுத்து அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸ்வாத் பகுதியில் ஒரு வாக்குச் சாவடியை தீவிரவாதிகள் குண்டு வீசி தகர்த்தனர்.
இன்னும் பல இடங்களில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தி தேர்தலை சீர்குலைக்கலாம் என்பதால், வாக்களிக்க மக்கள் தயங்குகின்றனர்.
தேர்தல் ஆணையம் கருத்து!
வாக்குப் பதிவு நிலவரம் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் காசி முகமது ஃபாரூக், மொத்தம் 64,176 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடப்பதால், அதன் போக்கையோ, விழுக்காட்டையோ பற்றி உடனடியாகக் கருத்துத் தெரிவிப்பது சாத்தியமில்லை என்றார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வந்துள்ள 500 க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள், ராவல்பிண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடந்த வாக்குப்பதிவைப் பார்வையிட்டதுடன், தேர்தலை இன்னும் வெளிப்படையாக முறைகேட்டிற்கு இடமின்றி நடத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.
வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் தேர்தல் நிலவரங்கள் குறித்துக் கருத்துக் கேட்டறிந்த அவர்கள், அதிபர் முஷாரஃப்பையும் சந்தித்தனர். அப்போது முஷாரஃப் அளித்துள்ள உறுதிமொழிகள் பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தனர்.
பொதுத் தேர்தல் மிகவும் வெளிப்படையாகவும், முறைகேடின்றியும் நடத்துவது பாகிஸ்தானின் நலனுக்கு மிகவும் அவசியமானது என்று பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் ராபர்ட் பிரின்க்லி தெரிவித்தார். தேர்தல் நடைமுறைகள் பாகிஸ்தானை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பெண்கள் வாக்களிக்கத் தடை!
வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் பெண்கள் வாக்களிப்பதற்கு மத அடிப்படைவாதிகள் தடை விதித்தனர். மியான்வலி என்ற பஞ்சாயத்தில் உள்ள 7,500 பெண்களுக்கு இவ்வாறு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டதாக ஜியோ தொலைக்காட்சி தெரிவித்தது.
இதே பகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பெண்களின் வாக்குகள் தனக்குத் தேவையில்லை என்று வெளிப்படையாக அறிவித்ததாகவும் அத்தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
இதேபோல, பெரா, ஸ்வாத் பள்ளத்தாக்கின் சில பகுதிகள், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சில பகுதிகள் ஆகிய இடங்களிலும் பெண்கள் வாக்களிப்பதற்கு மிகுந்த அச்சப்பட்டனர்.