Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொசோவோ பிரகடனம்: பிரிட்டன், ஜெர்மனி, ஃபிரான்ஸ் ஆதரவு!

கொசோவோ பிரகடனம்: பிரிட்டன், ஜெர்மனி, ஃபிரான்ஸ் ஆதரவு!
, திங்கள், 18 பிப்ரவரி 2008 (14:07 IST)
செர்பியாவிலிருந்து விடுதலைப் பெற 10 ஆண்டுக் காலமாக போராடி வந்த கொசோவோ தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்துள்ள நிலையில், அந்நாட்டை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் இன்று பிரஸ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கொசோவோ நாட்டை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றேறக்குறைய 20 லட்சம் மக்களைக் கொண்ட கொசோவோ, 90 விழுக்காடு அல்பானிய மொழியின மக்களைக் கொண்டதாகும். 7 விழுக்காடு செர்பியர்களைக் கொண்டதாகும். 11 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் நாடான யுகோஸ்லாவியா செர்பியா, போஸ்னியா என பிரிந்தது. அப்பொழுதே தங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென கொசோவோ மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை செர்பியப் படைகள் ஒடுக்க முற்பட்டதையடுத்து, கடும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து 1999 ஆம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் நேட்டோ படைகள் கொசோவோவுக்குள் புகுந்து செர்பிய படைகளை வெளியேற்றின. இதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தப்பட்டு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

கொசோவோ தலைநகரான பிரஸ்டினாவில் நேற்றுக் கூடிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஹசிம் தாச்சி , தனி நாடு பிரகடன தீர்மானத்தை படிக்க, அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளிக்க, கொசோவோ சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் ஹசிம் தாச்சி அறிவித்தார்.

கொசோவோ சுதந்திர பிரகடனத்தை பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம் வாய்ந்த நாடுகள் அனைத்தும் அங்கீகரிக்க முடிவு செய்துவிட்ட நிலையில், ஸ்பெயின், கிரீஸ், ரொமானியா, சைப்ரஸ் ஆகிய நாடுகள், இது ஒரு தவறான முன்னுதாரனம் ஆகிவிடும் என்று கூறியுள்ளன.

ரஷ்யா இதனை கொசோவோ பிரகடனத்தை கடுமையாக எதிர்த்துள்ளது. இது ஐ.நா. தீர்மானத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது.

இப்பிரச்சனையில் அனைத்து தரப்பினரும் அமைதி காத்து, பேசி முடிவெடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil