இந்தியா, பிரேசில், சீனா, மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளையும் சேர்த்து தற்போது உள்ள ஜி-8 நாடுகள் கூட்டமைப்பை ஜி-13 நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் நிக்கோலாஸ் சர்க்கோசி கூறியுள்ளார்.
ஜி-8 நாடுகள் என்று அழைக்கப்படும் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட்டமைப்பில் வலுவான பொருளாதார சக்தி கொண்ட நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் பிரேசில் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் நிக்கோலாஸ் சர்க்கோசி, அந்நாட்டு அதிபர் இஞ்ஞாசியோ லுலா டா சில்வாவை சந்தித்து பேசிய பின்னர், இந்தியா,பிரேசில், சீனா, மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளையும் ஜி-8 அமைப்பில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வளர்ந்து வரும் இந்த 5 நாடுகளும் உலகப் பொருளாதாரத்தை மட்டுமல்ல ஜி-8 நாடுகளின் பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்க கூடிய சக்தி பெற்றுள்ளன என்றும் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பிரேசிலுக்கு நிரந்தர இடம் கிடைக்க பிரான்ஸின் ஆதரவு உண்டு என்பதையும் சர்க்கோசி தெரிவித்துள்ளார்.
உலகம் எதிர்க்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசும்போது ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஒரு நாட்டையும், தென் அமெரிக்காவைசேர்ந்த ஒரு நாடு கூட இல்லாத நிலையில் நடைப்பெறும் பேச்சுவார்த்தையில் இரண்டு கண்டங்கள் விடுபட்டுப்போவதை நினைத்து கூடப்பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.