இந்தியாவின் வடக்கு, மேற்கு நகரங்களைத் தாக்கும் வல்லமை மிக்க, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஆற்றல் உடைய 'காஸ்னவி' ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
பாகிஸ்தான் ராணுவத்தின் ரகசியத் தளத்தில் நடந்த 'காஸ்னவி' ஏவுகணைச் சோதனை பற்றிய விரிவான விவரங்களை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ரகசியமாக வைத்துள்ளது.
290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த, 'காஸ்னவி' அல்லது ஹாட்ஃப்- III என்றழைக்கப்படும் இந்த குறைந்த தூர ஏவுகணை, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஆற்றல் மிக்கது என்றாலும், இந்தியாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று நடந்த 'காஸ்னவி' ஏவுகணைச் சோதனையை பாகிஸ்தான் இடைக்கால அரசின் பிரதமர் முகமதுமியான் சூம்ரோ, ராணுவத் தளபதி அஸ்ஃபாக் பர்வேஷ் கியானி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.
கடந்த ஜனவரி முதல் பாகிஸ்தான் நடத்தியுள்ள மூன்றாவது வெற்றிகரமான ஏவுகணைச் சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கவல்ல சஹீன்-1 என்ற இடைத் தூர ஏவுகணை, 1,300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கவல்ல கெளரி என்ற நீண்ட தூர ஏவுகணை ஆகியவற்றை பாகிஸ்தான் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.