மன்னாரில் கண்ணிவெடியில் சிக்கி காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட 2 காவலர்கள் பலியாகினர்.
இலங்கை மன்னார் மாவட்டத்தில் உள்ள சூடுவெந்தபுலவுப் பகுதியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து மன்னாருக்கு அலுவலக வேலையாக நேற்று (திங்கட்கிழமை) காலை 8:15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற உதவி ஆய்வாளர், காவலர் ஆகியோரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு!
இதற்கிடையில், மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மும்முனைத் தாக்குதல் முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
பண்டிவிரிச்சான் முதன்மை வீதி வழியாகவும், அதன் இரு பக்கங்கள் வழியாகவும் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1:30 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இம்மோதலில் சிறிலங்காப் படையினருக்ககு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மன்னார் கட்டையடம்பன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.