பாகிஸ்தானில் வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு தொடர்பாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிபர் முஷாரஃபின் செல்வாக்கு சரிந்து வருவது தெரிய வந்துள்ளது.
மேலும் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப் கட்சிக்கும் ஆதரவு மக்களிடையே அதிகரித்து உள்ளதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு ஐ.ஆர்.ஐ. அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் மக்களிடையே கருத்துக் கணிப்பை கடந்த மாதம் 19 முதல் 29 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தியது. அதன் முடிவுகளை நேற்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் பாகிஸ்தான் எதிர்க் கட்சிகளுக்கு கணிசமாக செல்வாக்கு அதிகரித்து உள்ளதைக் காட்டுகிறது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செல்வாக்கு பெனாசீர் படுகொலையை அடுத்து கணிசமாக அதிகரித்து தற்போது முன்னணியில் (36%) உள்ளது. இதற்கு அடுத்த படியாக நவாஷ் ஷெரிப் கட்சிக்கு (25%) இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. அதிபர் முஷாரஃபின் பி.எம்.எல்.(கியூ) 12% ஆதரவுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும் என 9 விழுக்காட்டினர் தான் கருத்து தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கக் கூடாது என்று 89 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளனர்.