மன்னாரில் கடந்த ஜனவரி முதல் சிறிலங்க ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுத் தாக்குதல்களில் 127 படையினர் கொல்லப்பட்டதுடன், 363 பேர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்துப் புதினம் இணைய தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், "மன்னார் களமுனையில் பாலைக்குழி திருக்கேதீச்சரம் அடம்பன் வீதி-கட்டுக்கரை-பரப்பாங்கண்டல் பண்டிவிரிச்சான்-தம்பனை-முள்ளிக்குளம்-விளாத்திக்குளம் ஆகிய முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதல்களிலும், திட்டமிட்ட தாக்குதல்கள், கண்ணிவெடிகளில் சிக்கியும் சிறிலங்கப் படையினர் 127 பேர் கடந்த மாதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 363 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிறிலங்கா படைத்தரப்பு இழப்புக்கள் பல அறிவிக்காமலும் உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.