தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை மீட்பதற்காக, ராணுவத்திற்குக் கூடுதலாகப் படையினரைச் சேர்க்கும் நடவடிக்கைகளை சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
இது குறித்துச் சிறிலங்க ராணுவத் தளபதி சரத் பொன்கோ, நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "கடந்த ஆண்டு மட்டும் ராணுவத்தில் 33,000 பேரை சேர்த்திருக்கிறோம். இந்த ஆண்டு 15,000 பேரை சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள படையினரைக் கொண்டு கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம். வன்னியில் உள்ள 2 லட்சம் மக்களையும் புலிகளின் பிடியில் இருந்து விரைவில் மீட்போம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "விடுதலைப் புலிகள், தாங்கள் கடந்த 25 ஆண்டுகளாகக் கற்றுள்ள கொரில்லா அனுபவத்தைக் கொண்டு போரிடுகிறார்கள். இதனால் அவர்களை ஒவ்வொரு கட்டமாகத்தான் வெற்றிபெற முடியும். தற்போது, புலிகளின் பலத்தை நாங்கள் பாதியாகக் குறைத்து விட்டோம்.
சிறிலங்க ராணுவத்தின் 53, 55, 57, 58, 59 ஆகிய படைப் பிரிவுகள் வன்னியைச் சுற்றிவளைத்து விட்டன. இதனால் எங்கள் கவனத்தை திசைதிருப்ப விடுதலைப் புலிகள் முனைகின்றனர். அதை முறியடித்துக் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே எங்கள் திட்டம். கைப்பற்றி விட்டுக் கடந்த காலத்தைப் போல விலக மாட்டோம். தொடர்ந்து அங்கு நிற்போம்" என்றும் சரத் பொன்கோ கூறியுள்ளார்.
இதற்கிடையில் சிறிலங்க ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கார கூறுகையில், "இந்த ஆண்டு மட்டும் சிறிலங்க ராணுவத்தில் 3,000 படையினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ராணுவத்தின் மொத்த பலம் 1,50,000 மாக உயர்ந்துள்ளது" என்றார்.