பாகிஸ்தானில் அவசர நிலை அமலில் இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியமர்த்த வலியுறுத்தி அந்நாட்டு வழக்கறிஞர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, பாகிஸ்தான் வழக்கறிஞர் சங்கத்தின் செயற்குழுத் தலைவர் க்யாஷி முகமது அன்வர் கூறுகையில், "நீதித் துறை ஜனநாயகம் மீட்கப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார்.
முன்னதாக, அவசர நிலை அமலில் இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செளத்ரியும், அவரின் குடும்பத்தினரும் இன்று வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, மேலும் சில நீதிபதிகளும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.