Publish Date: Mon, 11 Feb 2008 (11:24 IST)
Updated Date: Mon, 11 Feb 2008 (11:23 IST)
சிறிலங்காவில் சுற்றுப் பயணம் செய்யும் அமெரிக்க மக்கள் பேருந்துகள், ரயில்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அயலுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சிறிலங்காவில் கடும் மோதல் நடந்து வரும் நிலையில், அங்கு பயணம் செய்யும் அமெரிக்கர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்த கொள்ள வேண்டும். பேருந்துகள், ரயில்களில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்பதனால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
குறிப்பாக, வடக்கு, கிழக்குப் பகுதிகள் மிகவும் ஆபத்தானது என்பதால் அங்கு செல்வதைத் தவிர்த்து விடுங்கள். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசியல் கூட்டங்கள், ராணுவப் பகுதிகள், அரசு ராணுவ வாகனங்கள் செல்லும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். கிழக்கு பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்துள்ளது என்றாலும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.