பக்ரைனில் உள்ள கட்டுமானத் தொழிற்சாலையில் பணியாற்றும் இந்தியர்கள் உள்பட 1,300 பேர் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தூரட் அல் பக்ரைனில் உள்ள ஜி.பி.சச்சாரைட்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் தங்குமிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அண்மையில் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், அங்கு பணியாற்றும் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,300 தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தக் கோரியும், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தியும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தங்களின் உழைப்பில் அதிக லாபமீட்டும் நிறுவனம், தங்களுக்கு நாளொன்றுக்கு குறைந்த பட்சமாக 57 பக்ரைன் தினார் மட்டுமே ஊதியமாக வழங்கி வருகிறது என்றும், இதை உயர்த்தும் வரையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 100 தினார்கள் என நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தூதர் பாலகிருஷணா ஷெட்டி நேற்று அறிவித்த நிலையில், இப்போராட்டம் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.