இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அடுத்து வரக்கூடிய அமெரிக்க அரசு இதுபோன்றதொரு வாய்ப்பை இந்தியாவிற்கு வழங்காமல் போகலாம் என்று அமெரிக்கத் தூதர் டேவிட் முல்ஃபோர்ட் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்ஃபோர்ட் சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:
இந்தியா தன்னை உலக அரங்கில் நிலைநிறுத்திக் கொள்வதற்கும், போட்டியிடுவதற்கும் வாய்ப்புகளை வழங்கக் கூடிய அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவதற்குள் அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை என்றால், அமெரிக்காவில் அடுத்து ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி இதுபோன்றதொரு வாய்ப்பை இந்தியாவிற்கு வழங்காது.
அது ஜனநாயகக் கட்சியாக இருந்தாலும், குடியரசுக் கட்சியாக இருந்தாலும், கைவிடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை 2010 ஆம் ஆண்டிற்கு முன்னதாக மறுபரிசீலனை செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ விரும்பாது.
மேலும், அணு ஆயுதப் பரவல் தடையை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள் தங்கள் விதிகளைக் கடுமையாக்குவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள காரணத்தால், அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே தக்க தருணமாகும்.
அணுச் சோதனைக்குத் தடையில்லை!
இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்காவின் 1954 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பிறகும், அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தயக்கம் காட்டிவருவதால் அமெரிக்கர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா எதிர்காலத்தில் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துவதற்கு இந்த ஒப்பந்தம் தடையாக இருக்காது. மாறாக, அணுத் தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்குகூட வாய்ப்பு ஏற்படும்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்தியாவிற்கு அணுஎரிபொருள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுவது தவறான தகவல் ஆகும். இந்தியா தனது இறையாண்மைக்கு உட்பட்டு எடுக்கப்படும் எந்த முடிவிற்கும் இந்த ஒப்பந்தம் தடையாக இருக்காது.
ஒருவேளை இந்த ஒப்பந்தம் நிறைவேறாவிடில், இந்திய- அமெரிக்க நல்லுறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால், அது சிறிய அளவில் இருக்கும்.
தெற்காசியாவில் தனது இளைய கூட்டாளியாக இந்தியாவை மாற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது என்று தவறாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது முற்றிலும் தவறானதாகும். அதேபோல, ஈரான்- இந்தியா- பாகிஸ்தான் குழாய் எரிவாயுத் திட்டத்தை முடக்க அமெரிக்கா சதி செய்கிறது என்பதும் பொய்யான தகவலாகும்.
உலகில் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தியாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு உதவவே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகத் தான் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துகிறது”
இவ்வாறு டேவிட் முல்ஃபோர்ட் கூறினார்.