ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து இயங்கும் உலக பத்திரிகைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக அளவில் கடந்த ஆண்டு 95 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஈராக்கில் 44 பேரும், சோமாலியாவில் 8 பேரும், சிறிலங்காவில் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீது நடைபெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட 3 ஊடகவியலாளர்களும் அடங்குவர். அவை தவிர 'சாளரம்' சஞ்சிகையின் ஆசிரியர், 'உதயன்' பத்திரிகையின் ஊடகவியலாளர், 'நிலம்' சஞ்சிகையின் ஊடகவியலாளர் ஆகியோரும் கடந்த ஆண்டு கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு 2006, 2007 ஆம் ஆண்டுகளில் தான், அதிகளவிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2003இல் 53 பேரும், 2004இல் 72 பேரும், 2005இல் 58 பேரும், 2006இல் 110 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில், பெரும்பாலான வழக்குகளில் எவரும் கைது செய்யப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
உலக பத்திரிகை அமைப்பில் 102 நாடுகளை சேர்ந்த 18,000 பத்திரிகைகளும், 77 தேசிய பத்திரிகை அமைப்புகளும் உறுப்பினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.