பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை பற்றி விசாரணை நடத்திய ஸ்காட்லாந்து யார்ட் காவல் அதிகாரிகள், தங்களின் அறிக்கையை பாகிஸ்தான் காவல் அதிகாரிகளிடம் இன்று வழங்கினர்.
தங்கள் விசாரணையை முடித்துவிட்டு பிரிட்டன் திரும்பியிருந்த ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) இஸ்லாமாபாத் திரும்பினர். அவர்களை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், இன்று காலை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தங்கள் அறிக்கையை ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் வழங்கியதாகவும், அவர்கள் விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள் என்றும் பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மாலை ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிவிட்டுத் தனது காருக்குத் திரும்பிய பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார்.
அல் காய்டா ஆதரவு பயங்கரவாதி பைதுல்லா மசூத் தான் திட்டமிட்டு இப்படுகொலையை நிகழ்த்தியுள்ளார் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. ஆனால், இக்குற்றச்சாற்றை பைதுல்லா மசூத் மறுத்தார்.
இதையடுத்து, பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், இவ்வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு உதவியாக ஸ்காட்லாந்து யார்ட் காவல் அதிகாரிகள் தங்களின் விசாரணையைத் துவங்கினர்.
படுகொலை நடந்த இடத்தை பார்வையிட்ட அவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மருத்துவமனையில் பெனாசிர் புட்டோவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில்கான் நகரில் அய்திசாஸ் ஷா என்ற 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். பெனாசிரைக் கொல்ல வந்த 5 பேர் அடங்கிய தற்கொலைப் படையில் தானும் இருந்ததாக அந்த சிறுவன் கூறினான். அவன் சொல்வது உண்மையா என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்காட்லாந்து யார்ட் காவல் அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துவிட்டு பிரிட்டன் திரும்பிச் சென்றனர்.
முன்னதாக, வருகிற 18 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.