மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி தொழில் செய்து வந்ததாகவும், முறையான பயண ஆவணங்கள் இல்லை என்றும் கூறி இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச்சேர்ந்த 1,100 பேரை மலேசிய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலேசியாவில் தங்கி சட்ட விரோதமாக தொழில் செய்து வரும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக அந்நாட்டு குடியுரிமை துறை அதிகாரிகள் வணிக வளாகம், இரவு சந்தை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கையில் சட்ட விரோதமாக தொழில் செய்தல், உரிய பயண ஆவணங்கள் இல்லாமை போன்ற குற்றங்களுக்காக 1,084 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடியுரிமை அமலாக்க இயக்குனர் ஐசக் முகமது கூறியுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 500 பேர் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.