தங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாக வாக்களித்துள்ள மலேசிய அரசின் அறிவிப்பை அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் வரவேற்றுள்ளனர்.
மலேசிய அரசின் இந்த அறிவிப்பு வெறும் பேச்சோடு நின்று விடாமல் உடனடியாக அமலுக்கு வரவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீக்கியர்கள் வழிபடுவதற்கு கோயில், இந்துக்களின் கோயில்களில் அடிப்படை வசதிகள், தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வியளிக்கப் பள்ளிக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மலேசிய அரசிடம் எதிர்பார்ப்பதாக பால்பிர் சிங் என்ற வணிகர் கூறினார்.
முன்னதாக கோலாலம்பூரில் நடந்த உலக வர்த்தக மைய விழாவில் பேசிய மலேசியத் துணைப் பிரதமர் நாஜிப் ரஷாக், இந்தியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.
சில நேரங்களில் மலேசியர்களைக் காட்டிலும் இந்தியர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், இன்னும் அதிகமான உதவிகளை வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை விவாதிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாஜிப்பின் இந்த உறுதி மொழியைத்தான் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.