இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலைச் சமாளிக்கத் திறனின்றி சிறிலங்கா ராணுவத்தினர் திணறி வருகின்றனர். இதன் வெளிப்பாடாகக் கடந்த 2 நாட்களில் ராணுவத்தினரின் 3 முக்கிய முன்நகர்வு முயற்சிகளைப் புலிகள் முறியடித்து உள்ளனர்.
வட போர்முனையான கிளாலி, கண்டல், நாகர்கோவில் பகுதிகளில் இருந்து சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் முறியடித்ததாகவும், இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்ததாகவும் புதினம் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.
இன்று புதன்கிழமை காலை 5 மணி முதல் சிறிலங்காப் படையினர் தங்கள் தாக்குதலைத் தொடங்கியதாகவும், அவர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய 45 நிமிடங்கள் எதிர்த்தாக்குதலில் படையினர் தங்கள் நிலைகளுக்குப் பின்வாங்கியதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
மணலாறு முன்நகர்வு முறியடிப்பு!
இதேபோல மணலாற்றில் கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, ஜனகபுர பகுதிகளில் இருந்து முன்நகர்வை மேற்கொண்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இத்தாக்குதலின் இறுதியில் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
மன்னாரில் கடும் மோதல்!
மன்னார் பெரியபண்டிவிரிச்சான், வலயன்கட்டு ஆகிய இடங்களில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரின் நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர்.
வலயன்கட்டுப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊடுருவல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டதுடன், 3 கண்ணிவெடிகள், அதற்கான வெடிஅதிர்வு கடத்தி, தொலைஇயக்கி ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினரின் தாக்குதல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாகவும் புதினம் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.