பாகிஸ்தான் பொதுத் தேர்தலை அமைதியாகவும் வெளிப்படையாகவும் அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் நடத்தும் என்ற நம்பிக்கை தங்கள் கட்சிக்கு இல்லையென்றும், நாட்டிற்குள் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் துபாயில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதன் கீழ் பிப்ரவரி 18 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்காமல் இருந்தால் நல்லது" என்றார்.
தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அவசரம் காட்டுகிற அதேநேரத்தில், தேர்தலை வெளிப்படையாக முறைகேடில்லாமல் நடத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
அதேநேரத்தில், நாட்டின் ஜனநாயக அமைப்பை முழுமையாக மீட்டமைக்கவும், பத்திரிகையாளர் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், நீதிபதிகளின் உரிமையை மீட்டு வழங்கவும், ராணுவத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றவும் தங்கள் கட்சி போட்டியிடும் என்று நவாஸ் தெரிவித்தார்.
"தேர்தலை நடத்துவதில் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புக்கு விருப்பம் இல்லை. ஆனால், அதை நடத்தும்படி அவர் தள்ளப்பட்டு உள்ளார். தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் போராட்டம் நடத்துவோம்" என்று நவாஸ் கூறியதாகக் கல்ஃப் நியூஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.