இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
பிரிட்டோரியா நகரத்தில் உள்ள சிறிலங்கத் தூதரகத்தின் முன்பு நடந்த இந்தப் போராட்டத்திற்கு தென்னாப்பிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், சிறிலங்காவின் 60 வது சுதந்திர நாள் (04.02.08) கொண்டாடப்படும் வேளையில், சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்படும் காலத்திலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அழிப்பு முறைகளைக் கண்டித்தும்,போர் வெறிகொண்டு ஒருதலைப்பட்சமாக போர் ஓய்வு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது மற்றும் தமிழ் மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் மீது அதன் படைகளால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் கொலை வெறித் தாக்குதல்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தமிழர்களின் மீதான மனித உரிமை மீறல்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் தூதரகத்தை மூடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப் போராட்டத்தில், தென்னாபிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தென்னாபிரிக்கா தமிழர் கூட்டணைப்புக் கழகம், கௌரெங் தமிழர் கூட்டணைப்புக் கழகம், பெனோனி தமிழர் கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா கிளை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், சிவஞான சபா, சைவ சித்தாந்த சங்கம், பிரிட்டோரியா தமிழ் லீக் ஆகிய தமிழ் அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பங்கேற்றனர்.