பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகர ராணுவத் தலைமையகத்தின் அருகில் ராணுவத்தினர் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகில் உள்ள உயர்ந்தபட்சப் பாதுகாப்புப் பகுதியான ராணுவத்தின் தேசிய ஆயுதப்படை அலுவலகத்தின் வாயிலில் 7.15 மணிக்கு இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சிக்கிய பேருந்து பல மீட்டர் தொலைவிற்கு உருட்டிச் செல்லப்பட்டதுடன் முற்றிலும் உருக்குலைந்தது. அருகில் இருந்த கார்களும் மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன என்று நிகழ்வைக் கண்டவர்கள் தெரிவித்தனர். குண்டு வெடித்த சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவிற்குக் கேட்டுள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்விடத்தை ராணுவத்தினர் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆய்வு நடத்தினர். பின்னர், தாக்குதலில் 8 ராணுவத்தினர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவித்தனர்.
இத்தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.