அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹின்ட்ராஃப் தலைவர்கள் ஐந்து பேரும் மலேசிய பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
சமஉரிமை, சமவாய்ப்பு கோரி கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி மலேசியாவில் 20 ஆயிரம் இந்திய வம்சாவழியினர் ஊர்வலமாக சென்றனர். இது சட்டவிரோதமான பேரணி என்று கூறிய மலேசிய அரசு அமைதி ஊர்வலம் நடத்தியவர்களை விரட்டியடித்தது. மேலும், இது தொடர்பாக ஹின்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த மனோகரன், உதயகுமார், கனபதிராவ், கெங்காதரன், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து மலேசிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து கோலாலம்பூரில் கடந்த வாரம் 200 இந்திய வம்சாவழியினர் அமைதியாக போராட்டம் நடத்தினர்.
மலேசியாவில் நடக்க உள்ள பொதுத் தேர்தலில் ஹின்ட்ராப் அமைப்பினர் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று எஸ்.எம்.எஸ்., மூலம் அதிகமானோர் வலியுறுத்தி வருவதாக ஹின்ட்ராஃப் அமைப்பின் சட்ட ஆலோசகர் குலசேகரன் கூறினார்.
இந்நிலையில், பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐந்து ஹின்ட்ராஃப் தலைவர்களுடன் மலேசிய எதிர்கட்சி அடுத்த வாரம் ஆலோசனை நடத்த உள்ளது.