வடமேற்குப் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 3 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பெஷாவர் நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மார்டன் என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைக் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது.
நேற்று மாலை தொடங்கி இன்று காலை வரை தொடர்ந்த இம்மோதலில் காவல் அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் தப்பிவிடாதவாறு தொடர்ந்து கண்காணித்து வரும் காவலர்கள், பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்கு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர்.
பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோரைத் தங்களின் கேடயமாக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், மோதலில் சிக்கல் ஏற்பட்டதாக உயிர் தப்பிய காவல் அதிகாரி அப்துல்லா கான் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திவரும் தீவிரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.