பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அயறுலறவு துணை அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் கூறுகையில், "பாகிஸ்தானில் பிப்ரவரி 18 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தல் அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வரலாற்றில் எந்தத் தேர்தலும் முறைகேடின்றி நடந்ததாகத் தகவல் இல்லை என்பதால் பாகிஸ்தான் தேர்தலிலும் சில சிக்கல்களை எதிர்பார்க்கிறோம்" என்றார்.
"இருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்குமாறு பாகிஸ்தான் அரசை நாங்கள் கேட்டுக் கொள்வோம். அந்நாட்டு அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள், தேர்தல் பார்வையாளர்கள், ஊடகங்கள் என எல்லாத் தரப்பினரும் தங்களுக்கு உரிய ஒழுங்குடன் நடந்துகொள்ள வேண்டும்.
தேர்தலை வெளிப்படையாக நடத்துவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் நாங்கள் வழங்குவோம். பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றங்களை கூர்ந்து கவனித்து வருகிறோம். இதனால் தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்றார் ரிச்சர்ட் பெளச்சர்.