மன்னாரில் சிறிலங்க ராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 7 ராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 20 பேர் படுகாயமடைந்தனர்.
இலங்கையில் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்ககும், சிறிலங்க ராணுவத்திற்கும் இடையில் கடுமையான மோதல் நடந்து வருகிறது.
அடம்பன் பகுதியை நோக்கி பாலைக்குழியில் இருந்தும், திருக்கேதீஸ்வரம் வீதியில் இருந்தும் சிறிலங்கா ராணுவத்தினர் புலிகளின் மீது நேற்று காலை 7 மணிக்குத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதையடுத்து புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.
பிற்பகல் 12 மணி வரை நீடித்த கடுமையான மோதலுக்குப் பிறகு ராணுவத்தினர் தங்களின் நிலைகளுக்குப் பின்வாங்கினர். இத்தாக்குதலில் 7 படையினர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் விளாத்திக்குளம் பகுதியில் உள்ள புலிகளின் நிலைகளின் மீது தாக்குதல் நடத்த வந்த ராணுவத்தினரும், புலிகளின் எதிர்த் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.