மன்னாரில் பயணிகள் பேருந்தின் மீது சிறிலங்கா ராணுவத்தினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் பலியானதுடன், 9 மாணவர்கள் உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கையில் சிறிலங்கா ராணுவத்தினர் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்களுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மன்னார் மாவட்டம் தட்சணாமடுப் பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, சிறிலங்க ராணுவத்தினர் புதைத்திருந்த கண்ணிவெடியில் பயணிகள் பேருந்து சிக்கியது. இதில் 11 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக பள்ளமடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிகழ்விடத்தில் வேறெந்த வாகனங்களும் இல்லாததால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால், பலரின் நிலை கவலைக்குரியதாக மாறியதாகவும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்துப் பள்ளமடு மருத்துவமனை மருத்துவர் வெற்றிமாறன் கூறுகையில், "17 பேர் மோசமான காயங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களை மேல்சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.