தேவைப்பட்டால் ஈரானைத் தாக்கத் தயங்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மிரட்டல் விடுத்துள்ளார்.
தனது பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கு அவர் ஆற்றிய இறுதி உரையில், வளைகுடா பகுதியில் அமெரிக்க கூட்டுப் படையினரை மிரட்டுவது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போர் தொடுப்போம் என்றார்.
"ஈரான் தலைவர்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகிறேன். அணுஆயுத சோதனையை உடனடியாக நிறுத்தி விடுங்கள். உள்நாட்டில் அடக்குமுறை அரசியலை கைவிட்டு விட்டுச் சர்வதேச சமுதாயத்தோடு இணையுங்கள்' என்றும் புஷ் கூறினார்.
ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் போர்க் கப்பல்கள் ரோந்து சுற்றியபோது, ஈரான் ராணுவத்தினர் அவர்களை மிரட்டியதாக அண்மையில் குற்றச்சாற்று எழுந்தது.
இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்ததுடன், தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க கப்பலை ஈரானிய கடற்படையினர் நாகரிகமாக அணுகி விசாரித்தனரே தவிரத் தாங்கள் யாரையும் மிரட்டவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.
ஆனால் அந்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்கவில்லை என்ற நிலையில், ஜார்ஜ் புஷ் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.