ஈராக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை விலக்கிக் கொள்வதென்று ஆஸ்ட்ரேலியா முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான மீள்கட்டமைப்பு வசதிகளைச் செய்துதரும் பணிகளில் தங்கள் பங்களிப்புத் தொடரும் என்றும் ஆஸ்ட்ரேலியா கூறியுள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் கெவின் ரூட் வெற்றி பெற்றுப் பிரதமரான பிறகு, முதன் முதலாக அமெரிக்கா சென்ற அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் வாஷிங்டனில், அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ், அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனே ஆகியோரிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஈராக்கில் இருந்து 550 படைப் பிரிவுகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஆஸ்ட்ரேலியா அரசு அறிவித்தது. அமெரிக்காவுடன் உள்ள உறவுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ள ஆஸ்ட்ரேலியா, போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், ஆஃப்கானிஸ்தான் மக்களுக்குத் தேவையான மீள்கட்டமைப்பு வசதிகளைச் செய்துதரும் பணிகளில் தங்கள் பங்களிப்புத் தொடரும் என்றும் உறுதியளித்தது.