ஈராக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் நடத்திவரும் போருக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது பதவிக்காலம் விரைவில் முடிவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் ஜார்ஜ் புஷ் ஆற்றிய இறுதி உரையில், ஈராக் போரும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியும் முக்கிய இடம் பிடித்தன.
அமெரிக்காவில் சிறு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் 150 மில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக விரைவில் ஒப்புதல் வழங்கி உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அமெரிக்காவின் குடியேற்ற பிரச்சனை மிகவும் சிக்கலானது என்ற போதிலும், அதை சரி செய்ய முடியும் என்று கூறினார்.
ஈராக்கில் நடந்து வரும் போரில் விரைவில் வெற்றிபெற வேண்டுமானால், அங்குள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 3,00,000 ஆக உயர்த்துவதுடன், ஈராக் படைகளின் வலிமையையும் அதிகரிக்க வேண்டும் என்றதுடன், ஈராக்கில் தங்களின் முக்கிய எதிரியான அல் கய்டா இயக்கத்தினரை நிச்சயம் ஒடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார் புஷ்.