வடமேற்கு பாகிஸ்தானில் 250 பள்ளிச் சிறுவர்கள் - சிறுமிகளை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் தெரிவித்துள்ளார்!
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள காரக் நகரில் பானு பள்ளிக்கூடம் ஒன்றில் சுகாதார பணியாளர் ஒருவரை தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர். அவரை மீட்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இச்சம்பவத்தில் ஒரு காவலர் படுகாயமடைந்தார். இதனையடுத்து தீவிரவாதிகள் அப்பள்ளியில் உள்ள 250 குழந்தைகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
குழந்தைகளை விடுவிப்பது தொடர்பாக மாகாண அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே பழங்குடியின பிரதிநிதிகளும் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகளிடம் ராக்கெட் லாஞ்சர், கிரனேடு உள்ளிட்ட நவீன ஆயதங்கள் உள்ளதாக இம்மாவட்ட காவல் துறை அதிகாரி தர் அலி கட்டாக் தெரிவித்துள்ளார். இராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆனால் உதவி இன்னும் கோரப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.