அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவதற்குள் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு தூதர் டேவிட் சி முல்ஃபோர்ட் கூறுகையில், "அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் எங்களுக்குப் புரிகிறது. இருந்தாலும், அமெரிக்க அரசியல் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவதற்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்" என்றார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவை நாங்கள் எந்த வகையிலும் நெருக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எல்லா வகையான ஒத்துழைப்புகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. அப்போது ஒருவேளை ஜார்ஜ் புஷ் தோல்வியைச் சந்தித்தால், அதன் பிறகு அங்கு அமையும் புதிய நாடாளுமன்றத்தில் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நல்லாதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே என்பது குறிப்பிடத்தக்கது.