இலங்கை, மன்னாரில் சிறிலங்க ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் ராணுவத்தினர் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தங்களைத் தாக்க முயன்ற சிறிலங்கா ராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடும் எதிர்த் தாக்குதலில் 15 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் எந்தவித இழப்புக்களும் ஏற்படவில்லை.
பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்த மோதலில், இயந்திரத் துப்பாக்கிகள், ஆர்ட்டிலெறி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ராணுவத்தினர் பயன்படுத்தினர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலை நடத்தினர்.
இதற்கிடையில், மன்னார் சின்னப் பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் கண்ணிவெடிகளைப் புதைக்க வந்த சிறிலங்கா ராணுவத்தினரின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதேபோல, மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் தாக்குதல் நடத்த முயன்ற சிறிலங்க ராணுவத்தினரின் முயற்சிகளையும் புலிகள் முறியடித்தனர். இதிலும் புலிகளுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை.