சட்டபூர்வமாகப் பதவியில் நீடித்துவரும் தன்னைப் பதவியிலிருந்து நீக்க முடியாது என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள முஷாஃரப், பிரிட்டனின் "ஃபைனான்சியல் டைம்ஸ்' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "யாரும் விரும்புகிறார்களோ இல்லையோ, நான் அரசியல் சட்டத்தின்படியே நடப்பேன். நான் சட்டவிரோதமாக அதிபர் பதவிக்கு வந்தேன் எனக் கூறுவதெல்லாம் தவறான குற்றச்சாற்று."என்றார்.
"பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த பிரதமருடன் பணியாற்ற நான் தயாராகி வருகிறேன். பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி அதிபருக்கென சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால் பிரதமர்தான் அரசை நடத்த வேண்டும்' என்றும் முஷாரஃப் கூறினார்.
மேலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் அதிபரைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதை ஒப்புக்கொண்ட முஷாரஃப், எனினும் சட்டவிரோதமாக அதிகாரத்தில் இருப்பதாக தன்மீது குற்றம் சுமத்த முடியாது என்றார்.