பாகிஸ்தான் விரும்பினால் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உதவியாகத் தங்கள் நாட்டுப் படைகளை அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாக அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவும், ராணுவக் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் அமெரிக்கா எப்போதும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாதச் சிக்கலைத் தீர்க்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புடன் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய கேட்ஸ், முஷாரஃப்பின் கருத்துகளுக்கு மதிப்பளித்து தேவைப்பட்டால் தங்கள் படைகளை அனுப்பி வைப்போம் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவின் படைகள் பாகிஸ்தானிற்குள் நுழைந்தால் அது ஊடுருவலாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் கூறியது பற்றிக் கேட்டதற்கு, "அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. பாகிஸ்தானின் ஆலோசனைகளை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்." என்றார் கேட்ஸ்.