குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சகஜம் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் குடித்துவிட்டு விண்கலத்தில் பயணிப்பது, அதுவும் உலகமே வியக்கும் நாசா விண்வெளி வீரர்கள் இவ்வாறு செய்வதை உங்களால் நம்ப முடிகிறதா?
விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் குறித்து, 'நியூ சைன்டிஸ்ட்' என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின் மூலம் வெளியிடப்பட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவலை நாசா தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இதுகுறித்து, 31 விமான நிபுணர்கள், 87 விண்வெளி வீரர்களிடம் இணையதளம் மூலமாக ஒரு ஆய்வை நாசா மேற்கொண்டது. அனைத்து விண்வெளி வீரர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களது தகவல் தொடர்பு திறன், பாதுகாப்பு வழிமுறைகள், கொள்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.
இதுதவிர, நாசா அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கலந்துரையாடினர். கடந்த இருபது ஆண்டுக் கால ஆவணங்களும் பரிசோதிக்கப்பட்டன.
இறுதியில், விண்வெளி வீரர்கள் குறிதது வெளியான தகவல்கள் தவறானவை என்று நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் ஜான்சன் விண்வெளி மைய துணை இயக்குனர் எல்லென் ஒச்சா கூறுகையில், "பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை முறையாக பயன்படுத்தாததால் விண்வெளி வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு விஷயங்களில் நாசா நிபுணர்கள் - விண்வெளி வீரர்கள் இடையே பரஸ்பர உறவு நிலவி வருகிறது. அவர்கள் மிக திறமையானவர்கள், தகுதியுடையவர்கள், அவர்களது பணியை மிகச் சரியாக செய்து வருகின்றனர்" என்றார்.
"இதுதொடர்பாக நாசா எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை. ஆனால், பாதுகாப்பு விழிப்புணர்வு மேம்படுத்தப்படும்" என்று விண்வெளி வாழ்க்கை அறிவியல் இயக்குனர் ஜேப் டேவிஸ் கூறினார்.
ஆனால், 'பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தகவலை நாசா தொடர்ந்து மறுத்து வருகிறது' என்று பிரத்யேக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.