தென்னிலங்கையில் பாதுகாப்பு, தேடுதல் நடவடிக்கைகளுக்காக 8,000 க்கும் மேற்பட்ட சிறிலங்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தின் புத்தல மற்றும் தனமன்வில பகுதிகளில் மிகத் தீவிரத் தேடுதல் வேட்டைகளை ராணுவத்தினர் முடுக்கி விட்டுள்ளதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனமன்விலவில் நேற்று முன்நாள் இரவு 3 காவல் துறையினர் கொல்லப்பட்டதுடன், நேற்று நடந்த தாக்குதலில் 2 ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் அதிக அளவிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் ஏற்கெனவே பணியில் உள்ள 2,000 காவலர்களுடன், அதிரடிப் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் என மேலும் 2,000 காவலர்கள் தற்போது அனுப்பப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில், ராணுவத்தினர், கமாண்டோப் படையினர் என மொத்தம் 8,000 பேரை அரசு அங்கு குவித்துள்ளதாக அரசின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
இவ்வளவு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அப்பகுதியில் இதுவரை யாரும் ஆயுதத்துடன் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.