இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் குழு, தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதில் தோல்வி கண்டிருப்பதாகத் தெரிகிறது.
அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் இறுதியடைந்த நிலையில், '13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின்படி தீர்வுத் திட்டம் அமைய வேண்டும் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச வற்புறுத்தியதால் தான், முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன' என்று அனைத்துக் கட்சிக் குழுவினர் குற்றம்சாற்றியதாக இலங்கை ஊடகங்கள் தெரிக்கின்றன.
முன்னதாக, அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்திற்கான பரிந்துரைகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (23 ஆம் தேதி) அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் முன்வைப்பர் என்று கூறப்பட்டது. அதற்கான இறுதிக்கட்ட முயற்சியாக நேற்று காலை அனைத்துக் கட்சிக் குழு கூடியது.
இந்தக் கூட்டத்தில் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் படி இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தினை எப்படித் தயாரிப்பது என்பது குறித்து கடும் விவாதங்கள் நடந்தன. 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டப்படி தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு அனைத்து கட்சிக்குழுவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று மாலை 4.30 மணிக்கு அதிபர் மாளிகையில் அவசரக் கூட்டம் கூட்டினார். ஆனால் அந்தக் கூட்டத்தை அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் பலரும் புறக்கணித்தனர்.
சுதந்திர நாளன்று தீர்வுத் திட்டம்?
அனைத்து கட்சிக்குழுவின் நடவடிக்கைகள் தோல்வியடைந்தது குறித்து அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கேட்டபோது, "இதுவரை தாங்கள் எட்டிய முடிவுகள் குறித்து நேற்று மாலை நடந்த கூட்டத்தில் அதிபருக்கு அனைத்து கட்சிக் குழுவினர் விளக்கமளித்தனர். எனினும் இறுதித் தீர்வுத் திட்டம் குறித்து இதுவரை முடிவாகவில்லை.
அதனால் தீர்வுத் திட்டத்தை திட்டமிட்டபடி இன்று முன்வைக்க முடியவில்லை. அதனை முன்வைப்பதில் சிறிது காலதாமதம் ஏற்படும். பெரும்பாலும் சுதந்திர நாள் நிகழ்வில் இந்த தீர்வுத் திட்டத்தை அதிபர் வெளியிடலாம் என நினைக்கிறேன்" என்றார்.