இந்தியாவிற்கு யுரேனியம் விற்கும் விவகாரம் மிகவும் சிக்கலானது என்றாலும், அதுகுறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக ஆஸ்ட்ரேலியா கூறியுள்ளது.
புது டெல்லியில் இன்று இந்தியாவிற்கான ஆஸ்ட்ரேலியத் தூதர் ஜான் மெக்கார்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்ட்ரேலியாவின் நிலை குறித்து அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழுவிடம் (என்.எஸ்.ஜி) விவாதித்து வருகிறோம்.
அதேநேரத்தில், இந்தியா போன்ற அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரேனியம் விற்பதில்லை என்ற கொள்கையை மாற்றுவது குறித்து ஆளும் தொழிலாளர் கட்சி பரிசீலிக்கக் கூடும்.
ஆகமொத்தம் இந்தியாவிற்கான யுரேனிய விற்பனையில் சிக்கல் நிலவுவது உண்மைதான் என்றாலும், இதுதொடர்பாக ஏற்கெனவே இந்தியாவுடன் ஆஸ்ட்ரேலியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை மீறாமல் இருப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கு யுரேனியம் விற்கும் விவகாரத்திற்கு அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழுவில் உள்ள சில நாடுகள் எதிராகவும், சில ஆதரவாகவும் இருந்தாலும், ஆஸ்ட்ரேலியா ஆதரவான நிலையைப் பின்பற்றி வருகிறது." என்றார்.
ஆனால், கடந்த வாரம் இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதி ஷியாம் சரணிடம், தங்கள் கொள்கையின் காரணமாக இந்தியாவிற்கு யுரேனியம் விற்க முடியாது என்று ஆஸ்ட்ரேலிய அரசு கூறியுள்ள நிலையில், ஜான் மெக்கார்த்தியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.