'பயங்கரவாதத்தைக் கைவிட்டுவிட்டுத் திருந்தி வாழுங்கள்' என்று சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் கய்டாவின் தலைவன் ஒசாமா பின்லேடனுக்கு அவரின் மகன் ஒமர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஒமர் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "எனது தந்தையை நான் கடைசியாக 2000-ஆம் ஆண்டில்தான் பார்த்தேன். என் தந்தை தனது லட்சியத்தை அடைய வேறு வழிகளை கடைபிடிக்க வேண்டும். வன்முறையை கைவிட்டு திருந்தி வாழும்படி அவரை நான் கேட்டுக் கொள்கிறேன். வெடிகுண்டுகளால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 110 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்கு நான் மிகவும் வருந்துகிறேன். என் தந்தை எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரியாது.
நான் பின்லேடன் மகன் என்பதை மறைக்க விரும்பவில்லை. என் தந்தை இரக்கம் உள்ளவர்தான். சிலர் அவரை தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிட்டனர். அல் கய்டா இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. ஆனால் அதன் பணிகளை வேறு வழிகளில் திசை திருப்ப வேண்டும்." என்று கூறியுள்ளார்.
பின்லேடனின் 11 குழந்தைகளில் ஒமர் 4 ஆவதாகப் பிறந்தவர் ஆவார். தற்போது 26 வயதாகும் ஒமருக்கு அல் கய்டா இயக்கத்தின் கொள்கைகள் பிடிக்கவில்லை. இதனால், அமைதியை வலியுறுத்தி இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.