மலேசியாவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் பள்ளிகளுக்குச் செல்ல மடியாமல் தவித்துவரும் சுமார் 40,000 இந்தியக் குழந்தைகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள மலேசிய அரசு, இச்சிக்கலைக் கவனிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.
கடந்த வாரம் நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பிரதமர் அப்துல்லா அகமது பதாவியிடம், இந்தியக் குழந்தைகளுக்கு நேர்ந்துள்ள அவலம் குறித்து எடுத்துரைத்ததன் பலனாக, இச்சிறப்புக் குழு அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்று செலங்கர் மாகாண முதலமைச்சர் டாக்டர் முகமது கிர் டோயோ தெரிவித்தார்.
"இந்தியக் குழந்தைகளால் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை, வேலைக்குப் பதிவு செய்ய முடியவில்லை என்று பல்வேறு அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்னிடம் புகார் தெரிவித்தன.
இதுகுறித்து பிரதமரிடம் கூறியதும் அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சிறப்புக் குழு அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்திய வம்சாவழியினர் தங்கள் குழந்தைகளின் விவரத்தைப் பதிவு செய்வதற்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
நெருங்கிய உறவினர்கள், மருத்தவமனைகள், பெற்றோர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் எல்லாக் குழந்தைகளுக்கும் உடனடியாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்." என்றார் முகமது கிர் டோயோ.