ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்த இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளன் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா, ஆசியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உலக வங்கியும், சர்வதேச நிதியமும், ஜி 8 நாடுகளும் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளனுக்கு தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் டெல்லி ஐ.ஐ.டியில் நடந்த இந்தியா- பிரிட்டன் தொழில்துறை மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது பேசிய பிரெளன், "அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் நல்லெண்ண ஒப்பந்தங்களின் மூலம் புதிய எரிசக்தி வளங்களைப் பெறுவதற்கு உதவும் வகையில், சர்வதேச அணுசக்தி முகமை தலைமையில் சர்வதேச அமைப்பு ஒன்று உருவாக வேண்டும். ஆனால், உயர்ந்தபட்ச அணு ஆயுதப் பரவல் தடை விதிகளைக் கடைபிடிக்கும் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இந்தச் சலுகை வழங்கப்பட வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவிற்கு நிரந்த இடம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதரித்து வரவேற்கிறேன். மேலும், இந்தியா மற்றும் ஆசியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உலக வங்கியும், சர்வதேச நிதியமும், ஜி 8 நாடுகளும் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டால் அதை நான் ஆதரிப்பேன்.
சுற்றுச்சூழல் ரீதியான நிலையான வளர்ச்சிக்கு மிக அவசரமாக நிதி தேவைப்படுகிறது. இதனால், வறுமை ஒழிப்புக்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரும் அதேவேளையில், சுற்றுச் சூழலுக்கும் உலக வங்கி முக்கியத்துவம் தர வேண்டும். வறுமை ஒழிப்புடன் பருவநிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்யும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டங்கள் தேவைப்படுகின்றன." என்றார் பிரெளன்.
பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளனுக்கு டெல்லி பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. பின்னர் இந்தியா - பிரிட்டன் நாட்டு தலைவர்களுக்கு இடையேயான 4-வது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
இக்கூட்டத்தில், பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரம், தொழிற்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
மேலும், குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க் கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை, பிரெளன் சந்தித்துப் பேசவுள்ளார்.