இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க ராணுவத்திற்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் சிறிலங்க படையினர் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலை 3.00 மணிக்கு, வட போர்முனையான யாழ்., கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
விடுதலைப் புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 45 நிமிடம் நீடித்த கடுமையான மோதலின் இறுதியில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன், 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
விடுதலைப் புலிகளின் பதிலடியில் பெரும் இழப்புகளைச் சந்தித்த படையினர் தங்கள் முகாம்களுக்குப் பின்வாங்கினர் என்று புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னாரில் 10 ராணுவத்தினர் பலி!
இதேபோல, மன்னார் பாலைக்குழிப் பகுதியில் சிறிலங்க படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 25-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தனர்.
பாலைக்குழியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:00 மணி முதல் இரவு வரை விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது.
இயந்திரத் துப்பாக்கிகள், சிறியரக பீரங்கிகள், கையெறி குண்டுகள் துணையுடன் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகப் போர்முனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம் மோதலில் கமாண்டோப் படை அதிகாரி உள்ளிட்ட 10 படையினர் கொல்லப்பட்டனர். 25-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் இத்தாக்குதல்களில் 44 புலிகளும், 2 ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகவும், இருதரப்பிலும் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.