இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வாக சிறிலங்க அரசு உருவாக்கியுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இனப் பிரச்சனைக்குத் தீர்வாக அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ளது.
தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் 'மகிந்த சிந்தனை' என்ற கொள்கையின் கீழ், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் விவாதித்து உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.
இதுகுறித்து, தன்வீட்டில் பொங்கல் கொண்டாடிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டதற்கு, "பரிந்துரைகளை வருகிற 23 ஆம் தேதியன்று சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் கேட்டுள்ளேன். அதன்பிறகு அவை அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு உறுதியாக அமல்படுத்தப்படும்" என்றார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இதுவரை 57 கூட்டங்களை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.